Friday, 25 December 2015

மமதை கொண்டா

இறைவன் படைப்பில்
ஒவ்வொன்றும் உலகிற்கு
நன்மை தீமை புரிகின்றது
என்பதில் ஐயம் இல்லை...!!!

ஆனால் மனிதனைப் போல்
தீமை புரிகின்றவை எவையும்
இல்லை என்பதிலும்
ஐயம் இல்லை...!!

சுய நலத்திலும் சுய நலம்
சுரங்கமாக அவன் மனதில்..!!

தான் மட்டும் நலமாக
வாழ அடுத்தவன் தலையை
எடுத்தால்  தான் முடியும்
என்றால் தயங்காமல்
தூக்குவான் அருவாளை..!!!

ஒன்றை ஒன்று அழித்து
உயிர் வாழ்வதில் முதல்
இடத்தில் இருப்பது
மனித இனமே...!!!

கூட்டைக் கட்டும்
பறவையின் மரத்தை
வெட்டி வீட்டைக் கட்டுகிறான்
கூடி அழும் பறவையைத் தூக்கி
குப்பையிலே போடுகிறான்..!!!

துடித்து இறக்கும் போது
வேடிக்கையாக பிடித்து
விளையாடுகிறான்...!!!

குருவிக் குடும்பத்தை
அழித்து தன் குடும்பத்தை
பெருக்க மறைவிடம்
உருவாக்கின்றான்..!!!

அனைத்துமே உயிர் தான்
என்று வசனம் பேசுகிறான்
அதற்கான மதிப்பைக் கொடுக்க
மறுக்கின்றான்...!!!

வேர் விட்டு நிலம் காத்து
கிளை விட்டு நிழல் கொடுத்து
முகம் மலரப் பூத்து நிக்கும்
மரத்தை அடியோடு வெட்டிச்
சாய்கின்றான்  அடுத்த சில
தினங்களிலே மழை கேட்டு
அழுகின்றான்...!!!

விண்ணுக்கும் மண்ணுக்கும்
இடையிலே தான் சிறைப் பட்ட
வாழ்க்கை வாழ்வதை மறந்து
தலைக்கனம் கொண்டு
நடக்கின்றான்  நடக்கும் போதே
பூமி நடுங்கினால் பாதியில்
முடிகின்றது மனிதன் நாடகம்..!!

உயந்த வானம் உக்கிரம்
கொண்டால் வாரிச் சுருட்டி
அழித்து விடும் மரம் அழித்த
நிலத்தில் எழுந்த மனைகளை..!!!

ஆழ் கடலையே எல்லைபோட்டு
பிரிக்கின்றான் அமைதியான அலை
ஆவேசமானால் அனைத்தையும்
தன் வசமாக்கி விடும்..!!!

இவை அத்தனையும் அறிந்தும்
புரிந்தும் தெரிந்தும் மனிதன்
தொடர்ந்து கொடுக்கின்றான் பிற
உயிருக்குத் தொல்லையை..!!

இறுதியில் அவன் ஒரு பிடிசாம்பல்
இல்லை  ஆறடி மண் இவைதான்
அவன் நிலை என்பதை மறந்து
வாழ்கின்றான் மனம் மரத்துப் போன
மானிட ஜென்மம்.=!!!!


No comments:

Post a Comment