Saturday 15 October 2022

வடிவான மஞ்சள் நிலாவே
*****************************
பிடி மணலெடுத்து 
வடிவம் கொடுத்தானோ/
கொடி மலரெடுத்து 
இடை அமைத்தானோ/

மின்னலைக் களவாடி 
கருவிழி  பதியமிட்டானோ/
கார்மேக நாரெடுத்து 
தலைமுடி  நட்டானோ/

பனியோடு தேனிணைத்து 
செவ்விதழ் சமைத்தானோ/
பிரமனின் கலைவண்ணம் 
உன்னிடம்  கண்டேனடி /

வான் நிலவோடு 
ஒப்பிட்டுப் பார்த்தேனடி /
பிரமிப்பின் எல்லை 
வரைச் சென்றேனடி/

பிடிப்பானதடி  வடிவான 
மஞ்சள் நிலவே /
இருளான என்னிதயம் 
வெளிப்பாகிடவே
குடியேறிடுவாயோடி/

ஆர் எஸ் கலா

Friday 14 October 2022

நெல்லுக்கட்டு ஏத்திக்கிட்டு 
போகுறானே செல்லக்கண்னு.
********************************
என்னங்க கண்ணு 
கொஞ்சோன்டு நில்லுங்க /
வடக்கால தோப்புக்க
என்னையும் இறக்கிக்குங்க/ 
மொடக்குவாத  தாத்தாக்கிட்ட 
நானும் போய்க்கணுங்க/

கண்ணு கிண்ணு 
என்னாக்கா கொன்னுடுவேன் /
கம்முனு கும்முனு 
வருவாயாக்கா ஏறிக்கோ/

ம்க்கும் கடகடவென 
ஓடிக்கும் அடையாணி வண்டி /
கிடையிலே போட்டுக்கிட்டா
என்னாகுமோ வீராப்பு /

நெல்லுக் கட்டோடு 
மல்லுக்கட்டும் அயித்தானே/
சொல்லாலே கிள்ளிப்புட்டாய் 
என்னோட நெஞ்சத்தையே/
ஏத்திக்கிட்டு போறேன்னு 
ஒத்துக்கிட்டா போதுமையா/

Wednesday 12 October 2022

உறவுகள் ஊமையானால்
*****-**********************
உள்ளத்து உணர்வுகளை சொல்லிட
வார்த்தையில்லை /
உறவென்று குறித்திட உரியவர் யாருமில்லை /
உதாசனிப்பு சொற்கள் தாக்கிய பிள்ளை/
உதிரும் கண்ணீரில் வாழும் முல்லை/

பணம் திரட்டிடுவோரிடம் உண்மை
பாசமில்லை/
பணத்தாலே உறவுகளை பிளவாக்கிடும் 
காலம்/
பணத்தை எடை போட்டு உறவாடுவோரால் /
பரிதவித்திடும் சொந்தங்கள் விலகியோடிடும் நேரம்/

சிந்திக்கையிலே சிகரத்தில் ஏறுகிறது கோபம்/
சிந்தனையை வளர்த்தால் இதயத்தில் பாரம்/
உள்ளத் தவிப்பை சொல்லியழ யாருமில்லை/
உறவுகள் ஊமையானால் வாழ்வே இருளாகும் /

  ஆர்.எஸ். கலா
உள்ளக்   கதவினை  
திறந்து வைத்தேன்
*********************.
**********************.
ஓடும் குருதியில் 
உனது பெயரை நிறுத்தி/
பிறக்கும் சுவாசத்திலும் 
அதே பெயரைக் கிறுக்கி /

தும்மலுக்குள்ளே கம்மியாய் 
அழைப்பிதழைத் திணித்து /
காற்றோடு உன்னுள்ளே 
ஊடுருவிக் கொடுத்திட வலியுறுத்தி /

விரித்த பாயோடும் 
சிரித்த முகத்தோடும்/
இரவெல்லாம் காத்திருக்கேன் /
உனது வரவுக்காகப் பூத்திருக்கேன்/

உதய வானை நோக்கி இருக்கேன் /
ஒவ்வொரு நட்சத்திரமாக 
எண்ணிக்கையிலே கோர்த்திருக்கேன் /
விழித்திருக்கும் வெண்ணிலவிடம் 
ரகசியம் உரைத்திருக்கேன்/
ராத்திரி தாமரையாக ஒத்தையில் 
உனைக் காண  மலந்திருக்கேன் /

ஆலோலம் பாடிடும் குயிலும்
கிளியும் கூண்டுக்குள் போயாச்சு /
ஆராரோ பாடிடும் பக்கத்து வீட்டுத் 
தாயும் மழலையோடு தூங்கியாச்சு /
தெருவோர நாய்களும் ஒட்டுக் 
கடைக்குள்ளே சுருண்டாச்சு/

இதமான காற்றும்  அசைந்து 
முருங்கைப் பூக் கொட்டி வாழ்த்தியாச்சு/
பனிக் குளிரும் என்னை நெருங்கியாச்சு /
உமக்காக. இதயத்  தவிப்பும் பெருக்காச்சு/

தேக்கமாச்சு என்னுள்ளே ஏக்கம் /
தாக்கிடாதே வார்த்தையினாலே/
பார்க்கா விட்டால் நிறைவாகிடும் துக்கம் /
படியேறி நீவா  உள்ளக் கதவினை 
திறந்து வைத்தேன் /
  
ஆர் எஸ் கலா