Wednesday 30 March 2016

சாதி வெறி கொடுமை

மன்னிக்கும் குணம்
சேர்த்து அணைத்து வாழும் குணம்
இரக்க குணம்
இத்தனையும் நிறைந்தவை தான்
தமிழ் இனம்  தமிழ் நாடு பேரு
அங்கே எல்லாம் தலை கிழாகப்
போனதைப் பாரு.

அறுத்தெறியும் மனம்
அரக்க குணம்  அராஜகம்
நிறைந்து விட்டது அங்கே
இந்தியாவில் எப்போதும்
இந்த நிலைதான்  என்ற
கதையைக் கேளும்.

சாதிப் பசி மூலமுடுக்கெல்லாம்
சுவைச்சாறாகின்றது இளசுகளின்
இரத்தமே   எப்போதும் .

வெள்ளை  வேட்டி நல்ல தமிழ் உச்சரிப்பு
நயமான. பேச்சு  நல்ல மனிதர்கள் என
பெயரும் புகழும்  இந்தக் காட்சி  எல்லாம்
வெளிப்பார்வைக்கு மட்டும்.

மட்டம்  தட்டுகின்றது பிற  நாடு
மார்வு தட்டும் தமிழனின் நடவடிக்கையை
பார்த்து  குரல் கொடுக்கிறது நிறுத்தும்
படி அதையும் கொஞ்சம்  கேளும்.

அருவாள்  தூக்குபவன் எல்லாம்
உயர்ந்த சாதி என்று சுமந்து
பெற்றவள் சொன்னாளோ சபை தனில்
வந்து நின்று அது இல்லாத போது நீ
மட்டும் உயர்ந்த சாதி என்று உறுதி
படுத்த இயலுமோடா என்றும்.

உனக்கு பெயர் இட்டவன் உயந்த
சாதியாக இருந்தால் மட்டும் நீ
உயர் சாதியாகி விடலாமோடா?

சாதிகள் இல்லையடி பாப்பா என்று
பாடிய பாரதியார் பிறந்த நாடு
சாதி வெறியோடு அழைவதைப் பாரு.

சாதி போதை குருதியோடு மோதி
ஓடுகின்றது மடையர்களின் உடலிலே
சாக்கடை போல் தேங்கி விட்டது
மனம் மனிதம் மறந்து  சாதிக் கொலையே
மருந்தாகவும் விருந்தாகவும் போனது.

பத்து மாதம் சுமந்தவள் பதறுகிறாள்
தோள் மேல் சுமந்த தந்தை கதறுகிறார்
இரண்டுக்கும் சம்மதம் இல்லாத கச
போக்கிரிகள் துரத்தி வெட்டிக்
குபிக்கின்றார்கள் .

சாதி என்பது இறைவனால் கொடுக்கப்பட்டவை
இரண்டு மற்றவையெல்லாம் மனிதனால்
வகுக்கப்பட்ட அநீதி  அதை உடைத்தெறிந்து
வெளியே  வரத் தேவை மன உறுதி.

                 

வாழ்கை

வாழ்க்கையில்   பொறாமை,இருக்கிறது.
வாழ்க்கையில் வெறுப்பு இருக்கிறது.
வாழ்க்கையில் சுயநலம் இருக்கிறது.
வாழ்க்கை  வாழ ஆசைகள் இருக்கிறது.

வாழ்க்கையின்  அழகை ரசிக்க
நினைவு இருக்கு  ஆனால்
வாழ்க்கையில் வாழ்கை இல்லையே
வாழ்கையை வாங்க கடையும் இல்லையே.

வியாபாரமாகும் பொருளும் இல்லையே
வியாபாரியும்  எவரும்  இல்லையே
பாவம்  ஏங்கும் இதயம் தூங்கா விழிகள்.
வாடிய முகம்  வாட்டம்,கொடுக்கும் பார்வை.
காட்டிக் கொடுக்காத  போலி புன்னகை. 

விட்டு விட்டு  வந்து போகும் பெரு மூச்சு
இவைக்களை மறைக்கவே படும் பாடோ
பெருசாகப் போச்சு  மகிழ்வாக வாழ்கை
வாழ்வது போல் நடிப்பே வாழ்கையாக
வாழ்கின்றாள் அந்தப் பாவி மகள் .

           

இது உண்மை

சொல்லிக் கொள்ளும் அளவு ஏதும்
உரையாடவில்லை ஆனால் நெஞ்சை
தொட்டு விட்டுப் போகின்றது உன்
உரையாடல்  .

வெள்ளரிப் பிஞ்சு போல் வெதும்மி
வாடிய நெஞ்சம் பொங்கி எழும்
கடல் நுரை போல் பொங்கி மகிழ்ந்தது
அப்போ  வஞ்சி அவளின் நெஞ்சம்
கொஞ்சம் .

அவள் நெஞ்சினிலே வடுக்களுக்கோ
குறைவில்லை அதை அழித்து மறைக்கவே
கிடைத்த சொந்தம் நீ என்று எண்ணியது
அவளது நெஞ்சம் நம்பியதால் மிஞ்சியதோ
துக்கம்  தான் கொஞ்சம்.

     

மிஸ் ஆனது

காதல் காதல் என்று
காலத்தையும் மிஸ் பண்ணி
உறவையும் மிஸ் பண்ணி
உழைப்பையும் மிஸ்பண்ணி
உயிர் நண்பனையும் மிஸ்பண்ணி
உன்னால் எத்தனையோ மிஸ்பண்ணினேன்
உனனை நான் மிஸ் பண்ண கூடாது
என்று  இப்போ நீயும் மிஸ்சாகி விட்டய்
மிஞ்சியது நான் மிஸ்பண்ணாத. உன்
நினைவுகள் தான்
                  
                                 

என்ன? ரகம்

அவன் எழுதும்
ஒவ்வொரு கவிதையும்
ஒவ்வொரு  தரம்  
ஒவ்வொரு ரகம்......\

சில கவிதை சிந்திக்க
வைக்கும்.

சிலகவிதை ஆஹ
என்று வாய் திறந்து
வியக்க வைக்கும்.

சில கவிதை இது
நிஜமோ என்ற
எண்ணத்தை இழுத்து
வந்து  நிறுத்தி  வைக்கும்

சில கவிதையைப்
படித்ததுமே நம்மைதானோ
குறிப்பிடுகிறான்
என்று கவலையில்
ஆழ்த்தி  விடும்

சிலகவிதைகளைப்
படித்ததுமே  நம்
கண்ணீரை வடிக்க
வைக்கும்.

இப்படி அவனின்
கவிதைகளின்
தரமும் திறனும்
ஒரு வியப்புக்கு
உரிய கற்பனை.

ஆனால் இத்தனை
திறன் கொண்ட அவன்
எந்த ரகம் என்றுதான்
நான் அறியா முத்திரை
இதனால் இழந்தேன்
நித்திரை..........\

 

அரசியலும் நட்சத்திரங்களும்

எழுந்து நடக்கவே இயலாத முதியோர் முதல்
ஆயிரம் தடவை விழுந்து எழக் கூடிய
இளையோர் வரை முதல்வர் ஆசை
பெரிகி விட்டது அதிகார மோகம்
உச்சி முதல் உள்ளங் கால் வரை வளர்ந்து
விட்டது  சினிமாக் காரர்களின் நெஞ்சினிலே

கமரா முன் ஆட்டம் போட்ட கூட்டமெல்லாம்
ரோட்டு மேல மேடை யிலே போடுதையா
பிரச்சாரக் கூட்டம் சரன் வைத்த வாகனத்தில்
வீதி உலா செல்லும் ஆசை எழுந்து விட்டதனாலே

எம். பி. பதவி வரையாவது எட்டிப் பிடிப்போம்
என்று கூப்பாடும் கும்மாளமும் போடுதையா
நட்சத்திரப் பட்டாளம் விண் உலகில் மின்னும்
நட்சத்திரமாக தங்களை எண்ணிக் கொண்டு

நாற்காளிக் கனவில் துள்ளுதையா சினிமா
நட்சத்திரங்கள்  முதல்வர் ஆகும் முன்பே
உண்மையான மன சாட்சியோடு ஆட்சி
நடத்தியவர்களை நினைத்துப் பார்த்தால்
முதல்வர் ஆசை மறந்து விடும் பதவி
ஆசை பறந்து விடும்.

தனக்கு அத்தகைய திறனும் மனசும் இல்லை
என்பது புரிந்து விடும் கால்கள் தானாக
அடைங்கி விடும் மறைந்துள்ள மனிதநேயம் 
எழுந்து விடும் மனிதனாக வாழ விழி வழி
காட்டி விடும்

இல்லையெனில் தொல்லை தொடர்ந்து விடும்
இவை சினிமா போல் வாழ்கை இல்லை என்று
விமர்சனங்கள் நாள் தோறும் பாடம் புகட்டி விடும்
தமிழ் நாள்  ஏட்டுக்கு மௌசு ஏறி விடும்

அகில உலக தமிழர் பார்வையும் இந்தியாவை
வந்தடையும் இருந்தும் சாதி வெறி மதக் கொலை
கற்பழிப்பு கடத்தல் வெட்டுக் குத்து விடை
பெறாமல் ஒட்டியே வாழ்ந்து வரும் 
ஆட்சியில் அமர்த்தும் முன் அலசி உதறிப்
பாருங்கள் மக்களே பதப்படுத்த முடியுமா? என்று.

             

எப்போ எப்போ

செவ்வந்தி  இதழ் சுமந்த பெண்ணே.
சிக்கனம் இன்றி சிவந்த கண்ணே.
என்னை சிக்கனப் பிடித்து விட்டாயேடி
பெண்ணே அடி கண்ணே.

சிட்டாகப் பறக்கும் பெண்ணே நீ
சிக்கனமாகச் சிரிப்பதும் ஏனோ?
கண்ணே அடி பெண்ணே.

வெட்கத்தால் வேலி கட்டி நாணத்தால்
கதவு போட்டு நான் நுழைய முயலும்
போது தடை போடும் பெண்ணே.
உன் சின்ன முகம் பார்க்க ஏங்குதடி
என் க (ண்) ணே.

துக்கணாங்குருவிக் கொண்டைக் காரி
உன்னைத் தூக்கி நான் ஆட  அதைப்பார்த்து
ரசிக்கவே  இந்த அருவியும் ஏங்குதடி.

கரையும் என் ஆசை எல்லாம்
தரை புரண்டு ஓடுதடி  தலை தூக்கி
பாராமல் நீயும் தரை நோக்கி நகருவதும்
நியாயமோடி?

என் மனதை உன்னிடம்  பம்பரமாக
சுத்த விட்டு பின் புரமாக நான் தொடரும்
வேளையிலே  என் தொடைநடுங்கிப்
பயம் வந்து தொல்லை கொடுக்குதடி
வெட வெடத்துப் போன பாதம் இரண்டும்
வேண்டாம் என்று நடையை நிறுத்துதடி.

காதலில் விழுந்த என் மனம் கண்டு
அதிகமாகத் துடிக்கிறது இதயமடி
உனக்கு அருகதை அற்றவனாகப்
போனேனோ என்று நினைக்கையிலே
விழியிலும் அருவி பெருகுதடி.

நானும் உன்னைத் தொட்டு
நீயும் நாணம்  விட்டு  நாம்
என்ற மாலை கட்டி இன்பத் தேன்
சொட்டு  கொட்டப் போவது எப்போ.?

எப்போ  ?எப்போ? என அதை
நினைத்து நினைத்து என்
நெஞ்சம்  ஏங்குதடி பெண்ணே
அடி கண்ணே.........../////

வலி

நீ நெருங்கி நெருங்கி பழகி விலகியதால்
நொறுங்கியது  இதயம்.

நீண்டு கொண்டே போகின்றது
நினைவு  நெடும் பாதை போலவே.

நின்று  அறுக்கிறது மனதை
அருவாள் போல.

உன் திட்டம் புரியாமலே நீர்
பெருக்குது விழி.

நேசமும் பாசமும் வேசம் தானா?
இவ் உலகிலே.

என்று நானே கேள்வி எழுப்பினேன்  ஆம்
என்ற விடையே வந்து
உதித்தது மனதிலே.

ஏகப்பட்ட ஏமாற்றத்துடன் விலக்கப்
பட்டவளானேன் உன் அன்பு
கிடைக்காமலே .  :-(

 

சாதி

சாதி என்னடா சாதி
விடுதலை இயக்கம்
என்று ஒன்று உருவானது
இலங்கையிலே அன்று முதல்
மறுக்கப்பட்டது மதம் புதைக்கப்பட்டது
சாதி தமிழ் மொழி  பேசும் மக்கள்
அனைவரும்  ஒன்று  என
இணைக்கப்பட்டது.

ஆண் பெண் வேதம் அறுக்கப்பட்டது
உயர் ஜாதி கீழ் ஜாதி எனறு  நோக்கும்
பார்வை சிதைக்கப்பட்டது சாதி
என்றால் ஆண் பெண் மட்டுமே
என்ற கோட்பாடு  நிறுவப்பட்டது.

ஆல மர நிழலுக்கும் நாட்டாமைக்
கூட்டங்களுக்கும் சும்புக்கும் வேலை
எங்க நாட்டில் வந்ததேயில்லை.

சந்திக்கு சந்தி நின்று வெள்ளை
வேட்டிக் கள்ளனுங்க யாரும் சாதி
பற்றி கூட்டம் போட்டு கூக்குரல்
எழுப்பியதேயில்லை.

தமிழர்களால் ஒட்டு மொத்தமாக
ஒதுக்கப்பட்ட இனம் மொழி என்றால்
அது சிங்கள இனத்தவர்களே அப்படி
இருந்தும் தமிழ் பெண்ணையோ
தமிழ் ஆண்களையோ கரம் பிடித்து
தமிழனோடு ஒன்றிப்போன சிங்களவர்களுக்கு
என்றுமே கெடுதல் புரிந்ததேயில்லை.

எங்கள் நாடும் பல மொழி பல சாதி
மக்கள் வாழும் நாடுதானடா ஆனால்
தமிழ் நாடு பேரு தமிழனுக்கான
பகுத்தறிவு இல்லாத நாடு சாதி
வெறி பிடித்தாடும் பேய்க் காடு.

நீ எளிய சாதியாடி அதனால் தான்
சாதி மதம் பார்க்காதே என்று
பரிந்துரைக்கின்றாய் கவி வரிகளாலே
என்று வரிஞ்சி கட்டி நின்றான் ஒரு
பொறம் போக்கு  என் உள் பெட்டியிலே
வருகை தந்து.

அட தறுதல நல்லாக் கேளடா சாதி
பார்க்கா நாடடா இருந்தும் என்
சாதிக்கு முதல் இடம் உண்டடா.

வள்ளலார் சாதி காளிங்கா சாதி
சட்டி குடியான் என்று இலங்கை
தமிழில் உரைப்பார்கள் உங்கள்
தமிழில் சொல்ல வேண்டும் என்றால்
மார்வு உயத்தி நாட்டாம பரம்பரை
என்று உரைப்பீர்களே அந்த வழி
வந்தவளடா நான் ஆலயத்திலும்
எனக்கு  என்று ஒரு இடம் உண்டுடா
புண்ணாக்கு  .

இந்த சாதி வெறி எனக்கில்லையடா
இவைகளைத் தாண்டி ஒரு சாதி உள்ளதடா
அதுதான் மனித சாதி நான் அதைச்
சேர்ந்தவளடா.

போங்கடா பைத்தியங்களா
நீங்களும் உங்க சாதி வைத்தியமும்.

                

ஏக்கத்தோடு எதிர்பார்ப்பு

உண்மையை  உரைத்து
நன்மையைப் புரிந்து
நெஞ்சை நிமிர்த்தி நின்று விடு!
ஊக்கத்தை  கையில் எடுத்து
உன் வெற்றியை அடைந்து விடு!

உன்னையும் உண்மையையும்
உணராத நட்பை தட்டி விடு!
முயற்சியை முடிவாக்காமல்
உலகத்தில் உலாவ விடு!

சிறுக சிறுக சிந்தித்து
செயல் பட்டு விடு!
மறக்க முடியாத சோகத்தையும்
மாற்ற எண்ணி வென்று விடு!

நல் அறிவுரைகளை
ஏற்று விடு!
தீய வழி தானாகவரும்
தீன்டாமல் விலகி விடு!

கடமை கன்னியம்
மறவாத ஆட்சி புரிந்து விடு!
பல நாடு வியற்கும் வண்ணம்
நாட்டின்  நலத்தையும் வீட்டின்
வளத்தையும் வளர்த்து விடு!

நல்லவையை நாசம்
பண்ணி விடும் செயலுக்கு
தடை பிறப்பித்து விடு!
நல்ல பல திட்டங்களை
அறிவித்து விடு!

செல்வமும் புகழும் போதும்
என்று நினைக்கும் அரசியலை
மறந்து விடு!
சென்ற இடமெல்லாம் சிறப்பான
மனிதன் என்னும புகழைப்
பெற்று வென்று  விடு!

ஏழை எளியோரை மதித்து
மனித நேயத்தை வளர்த்திடு.!
ஏற்று மதி இறக்குமதி என
பல அவிபிரித்தி மூலம்
ஏழை மக்களையும் சிரிப்போடு
வாழ வழி வகுத்திடு!

உன் மக்கள் மனதில்
மட்டும் இல்லை உலக
மக்கள் மனதிலும்
உன் நினைவை நிரந்தரமாகப்
பதிய வைத்து விடு!

 

புரட்சிக் கவிதையா??

ஒரு புரட்சிக் கவிதை வேண்டுமாம்
உன்னால் முடியுமா? என்று ஒரு சாவால்
விடுகின்றான் என் திறமைக்கு திறவு
கோலாக ஒரு உறவு அது புது வரவு...../

புரட்சி மண்ணில் விருட்சமான புரட்சி
தமிழச்சி நான் என்று அறிய வாய்பு
இல்லை அவனுக்கு என்று நான்
நினைக்கின்றேன்  இன்று....../

வடிந்த குருதி கண்டு கலங்கிய விழி
இரண்டும் மறி நொடி அனல் பறக்க
முறைத்துப் பார்த்த நாட்கள் எத்தனை
என்று சொலி விட முடியுமா  ?உன்னால் .../

சரிந்து விழுந்த தமிழரின் சரித்திரத்தைப்
படைக்க விரல்கள் துடிப்பதை எடுத்துச்
சொன்னால் உமக்கு  புரியுமா? ...../

வெடித்துச் சிதறிய( செல் ) பாகங்களுக்கு 
தன் பிள்ளையை மட்டும் இல்லை சரிந்து
விழுந்த தென்னம் பிள்ளையைக் கண்டும்
கதறி அழுதார்களே  ஏழைகள் அந்தக்
கண்ணீர்க்  காட்சி என் கண்ணில் தெரிகின்றதே
அது உமக்கு  தெரிகிறதா?..../

தலையணையோடு பாயினிலே
படுத்துறங்கி கண் விழிக்க ஆசைப்
பட்ட படியே அடர்ந்த காட்டிலே உறங்கி
விழித்த காலம் கடந்து போனாலும்
மறக்க வில்லை இவை உமக்குத் தெரியுமா?.../

தமிழனுக்கான தலைக் கணம்
குறையாது என்றும் இன்றும் ஆங்காங்கே
குரல் கொடுப்பதை நீ அறியவில்லையோ?../

(75)  ஆம் ஆண்டுக்குப் பின்னே பிறந்த
பிள்ளை  தாலாட்டுக்  கேட்டு உறங்கியது
இல்லை..../

வெடி ஓசையிலே தூங்கி எழுந்த
மழலைகளே   இன்று வாழ்கின்றது
இலங்கை மண்ணிலே...../

கன மழையில் நனைந்ததை விட குண்டு
மழையில் குளித்து மடிந்த இல்லங்கைளே
ஈழ மண்ணில் அதிகம்.....///

புரட்சி வார்த்தைக்கு வறட்சியே
ஏற்படாது என்றும் இலங்கை  தமிழர்
கரங்களிலே......../

         

என் அன்பே

என் அன்பே நீ ஏன் என்
நினைவினிலே அழுகின்றாய்
உறக்கம்  இன்றி  உணவு இன்றி
ஏன் ஏக்கம் கொள்கின்றாய்
நான் உன்னுள் தானே அன்பே
குடி இருக்கின்றேன்.

உன் இதயம் தானே என்  மாளிகை  அதை
விட்டுப் போவேனோ  அன்பே நான்.
அந்த இடம் எனக்கானதாக இருக்கையிலே
அந்த மாளிகை  இந்த மங்கைக்குடா அன்பே.

நீ கல்லறைக்கு செல்லும்  போதும்  உன்
இதய அறையில்  நான் இருப்பேனடா
உன் அனுமதி அவசியம்  இல்லாது போகுமடா
உன் மூச்சும் என்   துடிப்பும்  ஒன்றாக நின்று
விடும் போது அனுமதி எதற்குடா  அன்பே.

            

விடை தேடுகின்றேன்

காதல் கவிதை
எழுதுபவன்
காதலிப்பவன்><இல்லை!

காதல் தோல்வியைக்
கிறுக்குபவன்
அத்தனைபேரும்
அனுபவித்தவனும்<>இல்லை!

காமத்தை விபரிப்பவன்
அதற்கு
அடிமையானவன்<>இல்லை!

காதலைப் போற்றுபவன்
அதில் வெற்றி
கண்டவனும்<>இல்லை!

தாயைப் போற்றி
எழுதுபவன் அத்தனை
பேரும் தாயின் பாதம்
பணிந்தவனும்><இல்லை!

தாய்ப்  பாசத்துக்கு
மதிப்புக் கொடுப்பவனும்
இல்லை!

தாய்தான் உலகம்
என்று வாழ்பவனும்
உண்டு தாயைத்
தெய்பமாக மதிப்பவனும்
உண்டு!

சமுதாய அவலங்களை
எல்லாம் எழுதுபவன்
அதற்காக அவனை
அற்ப்பணித்தவனும்><இல்லை!

இயற்கையை விபரிப்பவன்
எல்லாம் அதைக் காற்க
முயற்சிப்பதும் <>இல்லை!

தந்தையைப்
போற்றுவபன் எல்லாம்
தந்தை சொல்லை
மந்திரமாக எடுத்துக்
கொண்டவனும்><இல்லை

ஒரு கவிஞன் பல
தரப்பட்ட
அம்சங்களையும்
இம்சைகளையும்
திறம் படக்  கொடுப்பதே
அவன் சிறப்பு!

அதற்காக அவன்
அத்தனையும்
அனுபவிக்கவேண்டும்
என்று அர்த்தம்<>இல்லை!

எதைப் பற்றி எழுதினாலும்
சிலர் சிந்திக்காமல்
அருமை சூப்பர் என்று
கருத்திடுவார்கள்!

காதலைப் பற்றி
எழுதினால் மட்டும்
பல கேள்விகளைத்
தொடுப்பார்கள்!

யாரைக் காதலிக்காய்
காதல் ஏமாற்றமோ
நம்மை பற்றித்தான்
இவள்(இவன்) கவி
வடிக்கானோ (ளோ)என்று
பல சந்தேகங்களும்.

பல புரியாத கருத்துக்களும்
பல  மாதிரியான வினாவையும்
எழுப்பி மனதில்  ஒரு வித வலியைக்
கொடுப்பதும்   வளரும்
எழுத்தாளனை முளையிலே
தடுப்பதும் கெடுப்பதும்
ஏன்  ஏன்  ஏனோ??????

      

போதுமடா வலி

காலமும் உருண்டோடுது.
கோலங்கலும் வர்ண
ஜாலங்களாய் மாறுது.

என்னுள் நீ வந்த காலம்
தொட்டு இன் நாள் வரை
நான் மாறவில்லை .

தொடர்கின்றேன் நினைவால்
உன்னை நிழல் போலவே
தொடாமலே .

தவறாமல் அனுப்புகின்றேன்
செய்திகளை நிறுத்தாமலே.

தேய்ந்து கொண்டே போகின்றது
உன்னிடம் மட்டுமே என் நினைவு
தெரிந்து கொண்டேன் நான்.

உன் செயலிலும்
உன் சொல்லாடலிலும்
உன் அலட்சியத்திலும்
உன் நிராகரிப்பிலும்
புரிய வைத்து என்  பிரிவை
நோக்கி நீ  நகருகின்றாய் என்று.

   

புரிந்து நடந்தால் நம்மையுண்டு

தன் நம்பிக்கை  இழக்காதே.
தன்மானம் காக்க மறக்காதே.

சமுதாய கேலிக் கூத்துக்கு அஞ்சாதே.
சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ தயங்காதே.

வீட்டில் விசுவாசத்தைக் காட்ட மறவாதே.
நாட்டில் விஷக் கிருமிகளைக் கண்டால்
அழிக்காது நின்று  மயங்காதே.

காரணம்  இன்றி நேரத்தை விரையம் செய்யாதே.
காரணத்துக்கான நேரத்தை தவற விடாதே.

கல் மண் போன்று வாழ நினைக்காதே.
காலத்துக்கு ஏற்றால் போல் காய் நகர்த்த
மறவாதே.

உனக்கு என்று ஒரு கொள்கையை வளர்க்க
பயம்  கொள்ளாதே.
கடவுள்  கொடுப்பான் என்று காத்திருக்காதே.

கண்டவர்களை எல்லாம் கண் மூடித்தனமாக
நம்பாதே.
கண் கெட்ட பின்னே நின்று வருந்தாதே.

கண் இருந்தும் குருட்டுத்தனமாக வாழ்கை
நடத்தாதே.
தடக்கி விழும் போதும் தாவி எழும் துணிவை
இழக்காதே.

விதி விட்ட வழி என்று துவண்டு விடாதே.
மதி கொண்டு வென்று விடுவேன் என்று
நினையாது இருந்து விடாதே.

உன்னால் முடியும் என்ற எண்ணத்தை
கை விடாதே.
உனக்குள் உள்ள ஆறாம் அறிவை உறங்க
விடாதே.

நிச்சயம்  ஒளியான வாழ்வு வரும் கலங்கி விடாதே.
நிதர்சனம் கிடைக்கும் போது மனம் திறந்து
சிரிக்க மறவாதே.

           

என் கண்ணீருக்கு என்ன? பதில்

புது இல்லம்  மாற்றி மாற்றி  
குடி புகுந்து வாழ்வது போல்
மனிதா நீ உள்ளம்  மாறி மாறி
இன்பம் தேடுவது நியாயமோடா?

கூட்டை விட்டு கூடு மாறும்
குருவியும் கூட்டமாகப்
போகின்றதடா.

மனிதனுக்கோ மூச்சு விட்ட
பின்னே தன் கூடு மட்டுமே
போகுதடா.

உடலை நம்பி வாழும்
உயிருக்கோ மூச்சுதான்
உறுதுணையடா.

இழுத்து விடும் மூச்சு வர
மறுத்தால் வருந்தியும் பயன்
இல்லையடா.

இதை அறிந்தும் ஆசையில்
விழுவதாலே தொடர்வதோ
தொல்லையடா.

இருந்தும் நீ உள்ளம் மாறி
உள்ளம் இன்பம் தேடி ஓடுகின்றாயே
இவை உமது மடமையடா. 

நட்பு என்னும் பெயரில் உடைந்த
கண்ணாடி போல் வாழும்
வாழ்கை எதற்கடா.

ஓடிவந்து உதவா நட்பு
உறுதியாகுமோடா.

உண்மை என நடிக்கும் போலி
வாழ்கை தேவையோடா.

அன்பை நாடி நெருங்கும்
உள்ளத்தை நொறுக்குவது
மனிதனுக்கு உரிய செயலோடா .

அன்பான வார்த்தை ஆயிரம் 
கவலைக்கு மருந்து என்று நீ
அறியவில்லையோடா.

உன் பேச்சு எல்லாம்
பொய்யாகிப் போகின்றதே
இது நியாயமோடா.

உண்மை அன்பு உன்  உள்ளத்தில்
ஊற்றெடுத்தால் உன்னை
மகான் என்று போற்றுவேனடா.

நான் பெற்ற வரம் என்று
மகிழ்வேனடா
உன் வாழ்த்துப் பாடுவேனடா.

நாள் தோறும் உன் உள் நான்
என் உள் நீ என்ற எண்ணத்தோடு
வாழ்ந்து மடிவேனடா.

                  

Friday 25 March 2016

இது என்ன கொடுமை

படம் பதவி பகட்டு பாராட்டு
விருது விமர்சனம்  பொன்னாடை
புகழாரம்  பலருக்கு கிடைக்கின்றதே
இவர்கள்  எல்லாம்  தரமான கவிஞர்களா?
எனக் கேட்டால்.

உடனே பதில் வர மறுக்கின்றது
தலை கீழ் நோக்கி  சாய்கிறது
பதட்டம் பிறக்கின்றது
சாக்குப் போக்கு வார்த்தைகள்
வருகின்றது.

சாதிச்ச கவிஞர்களைக் கேட்டால்
இக் கேள்வியை சாட்டை போல்
பதில் பிறக்கும் விளக்கொளி போல்
விளக்கம்  கிடைக்கும் தன் நம்பிக்கை
அதற்குப் பரிசாகக் கிடைக்கும்  கவியின்
புகழ் சிறக்கும் தரமான போட்டியாக
நிறைவு பெறும்.

முகநூல்  கூத்தைப் பார்க்கையிலே
கவி மேதை கண்ணதாசன்  கவி வரி
நினைவில் வருகின்றது 
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும்
வேறு பாடு தெரியலே முகநூலில்
விளக்கம்  கொடுக்கத் தெரியாத
விளக்கெண்ணெய் எல்லாம் கவிஞனாம்
முகநூல்  அரங்கிலே.