Thursday 14 April 2016

தாலாட்டு

தங்கத் தொட்டில் கட்ட வழியில்லை.
சாமந்திப்பூ கொண்டு தூவ முடியவில்லை.

அன்னை மடி மீது வைத்து தங்கமே
தாலாட்டு பாடுகின்றேன்  ஆராரோ ஆரிரரோ.
தங்கமே யாராரோ யார் இவரோ.

வைரத் தொட்டில் கட்ட பணமும் இல்லை
முத்து மாலை கோர்வை உன் கரங்கள்
பிடித்து விளையாடப் போவதுமில்லை.

அம்மா உன்னை முந்தானை சேலையிலே
முத்தம்  கொடுத்து உறங்க வைப்பேன்
கண்மணியே கண் உறங்கு  கண்மணியே
நீ உறங்கு  யாரோ யாராரிரரோ  ஆரிவரோ.

வெள்ளித் தொட்டில் கட்ட சில்லைறையும்
கிடைக்க வில்லை என்று வெண்ணிலவு
விளையாடும் வேளையிலே முற்றத்தில்
உன்னை படுக்க விட்டு பக்கத்தில் நான் அமர்ந்து

பாட்டு ஒன்று பாடி உன்னை
உறங்கச் செய்வேன் நட்சத்திரம் போல்
வாய் மலர்ந்து சிரிக்கும் கண்மணியே
கண்ணுறங்கு பொன் மணியே நீ உறங்கு
ஆராரோ ஆரிரரோ யார் அடித்தாரோ அடித்தாரை
சொல்லி  அழும்  அம்மா  சின்ன மகளே.

ராஜாத்தி போல் நீ எனக்கு வந்த பிள்ளையடி
ஆனாலும் ராஜா வீட்டு ரோஜா இல்லையடி
பவளம்  நவரத்தினம் பதித்த கட்டில்  இங்கே இல்லையடி

விரித்த பாயிலே உன் தந்தை அணைப்பிலே 
அன்போடு கண் உறங்கு உன் மலிகை இமை மூடி
நீ உறங்கு ஏழை வீட்டு இளவரசியே
இன்பமாய் நீ உறங்கு துன்பம் உனக்கில்லை
என்று நீ  நன்றாய்  உறங்கு ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ கண்மணியே ஆராரோ.

          

No comments:

Post a Comment