Monday 8 October 2018

வாத்து இறைச்சி பொரியல் குழம்பு

தே.பொருட்கள்

வாத்து இறைச்சி 1/2 கிலோ
சி.வெங்காயம் 100கிராம்
பச்சை மிளகாய் 3
தக்காளிப்பழம் 3
பூண்டு 5 பல்
கடுகு சிறிதளவு
மஞ்சள் 1/2தே.கரண்டி
மிளகு 1/4தே.கரண்டி
கறி மிளகாய் தூள் தேவைக்கேற்ப
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
ரம்பை இலை 2
சீரகப்பொடி 2சிட்டிகை
சோம்புப்பொடி 1சிட்டிகை
வெந்தயப்பொடி 2 சிட்டிகை
தேங்காய் எண்ணெய் 1/4 லீ
உப்பு சுவைக்கேற்ப
...

செய்முறை

முதலில் வாத்து இறைச்சியை நன்கு சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் வாத்து இறைச்சியை மீண்டும் உப்பு மஞ்சள் சிறிதளவு சேர்த்து நன்கு பிரட்டிக் கழுவவும் ( வாத்து இறைச்சியில் ஒருவித மணம் வரும் அதைத் தவிர்ப்பதற்கே ).
பின்னர் வாத்து இறைச்சியை கடாயிற் இட்டு அதனுடன் சிறிதளவு உப்பு மஞ்சள் ரம்பைஇலை சிறிதாக நறுக்கியது கறிமிளகாய்த் தூள் சேர்த்து நன்கு அவியவிடவும். அவியும் வேளையில்
சி.வெங்காயம் பூண்டு தக்காளி கறிவேப்பிலை ரம்பை இலை என்பவற்றைச் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.அதோடு பச்சைமிளகாயை விதை நீக்கி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். சுவை மணம் சேர்ப்பதற்கே பச்சைமிளகாய். காரத்திற்காக அல்ல. விரும்பாவிடின் தவிர்க்கலாம்.
இறைச்சி நன்கு அவிந்ததும் இறக்கி மற்றுமோர் வானலியில் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து எண்ணெய் காய்ந்ததும் இறைச்சித் துண்டுகளை இட்டு இளம் பொரியலாக ( மொறுமொறுப்பாக விடவேண்டாம்) பொரித்து இறக்கவும். அனைத்தையும் பொரித்தபின்
வேறு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் 1மே.கரண்டி இட்டு அதனுள் கடுகைப் போட்டு வெடித்ததும் பச்சைமிளகாய் சேர்க்கவும். பின்னர் நறுக்கிய பூண்டு வெங்காயம் சேர்த்து தாளிதம் சௌய்து பொன்னிறமானதும் அதனுடன் கறிவேப்பிலை ரம்பை இலை சேர்த்து தாளிக்கவும். அதோடு தக்காளி சேர்த்து தாளித்து தாளித்தவற்றுடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கறிமிளகாய்த் தூள் காரத்திற்கேற்ப சேர்த்து பிரட்டி அதனுள் சிறிதளவு நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதிக்கும் போது பொரித்த வாத்து இறைச்சியை சிறிது சிறிதாக சேர்த்து குழம்பில் பிரட்டி கொதிக்க விடவும்.
பின்னர் அதனுள் சீரகப்பொடி சோம்புப்பொடி வெந்தயப்பொடி மிளகையும் பொடிசெய்து தூவவும்.
அதோடு நறுக்கிய கறிவேப்பிலை தூவி பிரட்டி கறியை மூடி இளந்தீயில் 2நிமிடம் வரை வைத்து இறக்கி ஆறியதும் பரிமாறலாம். சுவையான வாத்து இறைச்சிப் பொரியல் குழம்பு தயார்...

திருமதி பிரிந்தா புஷ்பாகரன்

No comments:

Post a Comment