Sunday 21 October 2018

விடிந்தால் இரவு

மதுவுக்குள் மனதைத் தொலைத்து 
மயக்கத்தில் தன்னைத் தொலைத்து
மனிதன் என்ற மதிப்பை தானே தொலைத்து
மதிகெட்ட வாழ்க்கையில் தன்னையே தொலைத்து ..!

மானம் மரியாதை  கெட்டு வாழும் மானிடா
கூறுகெட்ட உலகிலே நீ மாறுபட்ட கதையெடா
தறுதலை வாழ்வு உமக்கு எதற்கடா...!

தெருத் தெருவாக உன் பாதம் சுற்றுதடா
தெருமுனையில் பார்ப்போர் முகம் சுழிக்குதடா
பெற்ற தாய் தந்தை மனம் வருந்துதடா
கட்டியவளின் கண்களும் நீர் சிந்துதடா ...!

பெத்த பிள்ளையும் சோத்துக்கு வக்கில்லாமல் வாடுதடா
நித்தமும் குடிக்காக மத்தவன் கால் பிடிக்காய் நீயடா
வாடிய  குடலில் நீ ஊற்றும் மது உயிரைக் குடிக்குமடா  ...!

மதுவிலே விழிக்கிறாய் மதுவிலே உறங்குகிறாய்
மதுவையே நினைக்கிறாய் மதுவையே அணைக்கிறாய்
மதுவின் மடியில் உன் உயிர் அதன் பிடியில் உன் மூச்சு
மது இறுக்கிப் பிடித்தால் அன்றைய மூச்சுதான்  இறுதியடாஅது  உறுதி .!

   

No comments:

Post a Comment