Saturday 12 January 2019

அதிர்ச்சியோடு நான்

பாவாடை தாவணியில் பார்த்த உருவம் /
பருவம் கொண்ட மங்கையுருவம் /
பூவாடை வீசி வர புருவம் உயர்த்தி
பார்த்த உருவம் /
புது மலராய் பவனி வரும் கன்னி உருவம் /
தேன் சொட்ட தமிழ் பேசியே புன்னகைத்த அந்த உருவம் /
நாணம் கொண்டு நகர்ந்த நங்கை உருவம் /

சிறு இடையில் ஒட்டியாணம் மாட்டி /
சிணுங்கும் கொலுசோடு வந்த உருவம் /
செவ்வந்தி போல் முகம் மலர்ந்து/
கருவண்டு தேனீர் கண்டு முத்தமிடாத பிஞ்சுப் பருவம் /

கருங் கூந்தலிலே இரு சடையிட்டு/
வகுத்த உச்சி மேலே ஒற்றைப் பூ இட்டு/
குட்டையான தோற்றத்துக்கு உயர்வான பாதணி போட்டு /
மெடுக்காக எதிரே வந்த அந்த உருவம் /

பறித்து விட்டதே எந்தன் வாலிபப் பருவத்தை /
பிடித்து விட்டது வெத்து அறையான இதயமதை /
துடிக்க விட்டது தூங்கும் இளம் வயதை /
கடிக்க விட்டது தனிமையிலே நகமதை/

புதுமை உணர்வுகள் பூத்திடவே /
பதுமை அவளைத் தேடி நகர்ந்திடவே /
பழமைக் கதை ஒன்றை அறிந்தேன் /
முழுவதும் கேட்டு விட்டு பிரமித்து நின்றேன் /

சின்னஞ்சிறு வயதிலே /
சிந்திய கண்ணீரோடு /
தொட்டாற் சிணுங்கி போல் /
மூக்கும்  துடைக்கத் தெரியாமல் /
அழுக்கு படிந்த உடையோடு /
என்னுடன் ஓடி விளையாடிய /
அடுத்த தெரு பொன்னம்மாவின்
மகள் பரமேசு தான் அவளென
அறிந்தேன் அதிர்ந்தேன் /

No comments:

Post a Comment