Monday 18 May 2020

முள்ளி வாய்க்கால் நினைவு


முள்ளி வாய்க்கால் நினைவு.
சொல்லி அழுகிறது .
பல கதைகளை.
இலட்சியத்திற்குக் கொள்ளி 
வைத்த கயவர்களை
கிள்ளி எறியச் சொல்லி அழுகிறது.

அதிரக் கொட்டிய வெடியில்.
சிதறிய உடலின் ஆவிகள் எல்லாம்.
விடுதலை கேட்டு அலைகிறது.

வெளியே சென்ற பிள்ளை வரவில்லை.
துவைத்த உடை போட .
பிள்ளை மடிந்த செய்தி அறிந்து.
சரிந்து விழுந்து மாண்ட தாயின் 
ஆத்மா பிள்ளையைத் தேடி அழுகிறது.

போரிலே வென்ற வீரனையும்.
மார்பு உயத்திய மாவீரனையும்.
உப்பு நீருக்குள் குருதி 
சொட்டச் சொட்ட சுட்டு வீழ்த்தியது  
யுத்த விமானம்.

அண்ணா என்று ஓலமிட்ட தங்கை.
மகனே என்று நெஞ்சில் அடித்த அன்னை.
கதறிய உறவு பதறிய மக்கள்.
இவர்களையும் விட்டு வைக்கவில்லை.
கொதறியே விட்டது இனவெறி.

அடி வயிறு தடவிய கர்ப்பனியின் 
கரம் ஏறும் முன்னே.
முப்படையின் தோட்டா சுவைத்தது குறைமாதச் சிசுவை.

எண்ணி எண்ணிப் பார்க்கையிலே.
இதயம் கனக்கிறது/
நொந்து நொந்து நூலாய் போன நெஞ்சம்.
அழுது அழுது கண்ணீர் வற்றிய விழிகள்.
அணையாச் சுடராய் எரியும் கோபம்.
ஆறாத காயம் நோவாகிப் போகிறது.

தீராத தாகம் தீரும் நாளை தேடுகிறது.
இழப்பின் தொகை இன்னும் கணக்கில் இல்லை.
ஆண்டு பல கடந்தும் கண்ணில்.
முள்ளி வாய்க்கால் அவலம் மறையவில்லை.
ஈழத்துக் கிணற்று நீரிலும்
குருதி வாடை எழுகிறது.

No comments:

Post a Comment