Friday 29 July 2016

ஏற்புரை

பெற்றோரை வணங்கி
தமிழைப் போற்றி
தமிழ் மண்ணை மதித்து
தமிழை வளர்க்கவும்
தமிழை வாழ்த்தவும்
மிகத் தொலை தூரத்தில்
இருந்து வருகை
தந்திருக்கும் தமிழ்
நெஞ்சங்கள் அனைவருக்கும்
இந்த சிறிய தமிழ் மகளின்
இனிய வணக்கங்கள்  

கரை சேராத படகு  என்னும் என் 
கற்பனைக் கருக்குழந்தையை
கரை சேர்க்க துடுப்பாய் துடிப்போடு
கூடியுள்ள உறவுகளே 

குயில் குப்பம் போல்
குடிசைகளும் கூட்டமாய்  பறவைகள்
வாழும் பச்சைக் காடுகளையும்
ஓயாது ஓசை கொடுக்கும்  ஆழ் கடலையும்
நிரை நிரையான பனை மரங்களையும்
கொண்ட அழகிய சிறிய கிராமத்துக்
குயில் தான் உங்கள் கலா 

அப்படியான ஓர் இடத்தில் இருந்து வந்திருக்கும்
என் எழுத்து வடிவை ரசித்தோரையும்
சுவைத்தோரையும் தூற்றியோரையும்
போற்றியோரையும்  விமர்சனம் செய்தோரையும்
வாழ்த்தியோரையும் வரவேற்கின்றேன்
உங்கள் கருத்துக்களை நான் முழுமனதோடு
ஏற்றுக்கொள்கின்றேன் 

தடக்காத கால்கள் இல்லை தடக்கி விழுந்து
எழுவதுதான் முயற்சிக்கு முதல் புள்ளி
அதுபோல் தான் எனது இலக்கியப் பயணமும்  
தட்டிக் கொடுப்போரை மட்டும் இல்லை தட்டி
வீழ்த்துவோரையும் நான் மதிக்கின்றேன்
காரணம் எனக்குள் இருக்கும் தன் நம்பிக்கையை
தட்டி விடும் உறவு அவர்கள் தான் 

ஆம் இன்று உங்கள் முன் நான் மேடையில்
என்றால்  என்னை தட்டிக் கொடுத்தோரை விட
தட்டி வீழ்த்த நினைத்தோரோ காரணமாக
இருப்பார்கள்  என்னை வார்த்தையாலும்
கருத்தாலும் சிப்பமாக்கியவர்கள்  அவர்களே தான்
என் ஆசான்கள் .

முகநூலில் கிடைத்த முத்து  நட்பாகக் கிடைத்த
சொத்து இந்த துறை முகத்தில்
பிறந்தவளுக்கு துறை முகத்தில்
இருந்து கிடைத்த அன்பு தோழன் துரை
முகநூலில் கவிப்பயணத்துக்கு பாதை
போட்டான்  உலகுக்கு என்னை அடையாளம்
காட்டியது  சகோதரி  ஹிதாயா   இவர்களுக்கு
என்றும் கூறுவேன் நன்றிகள்

தூக்கம் விழித்து தொலைவில்
இருந்து வாழ்த்த வந்த அனைவருக்கும்
தடாகம் கலை இலக்கியவட்டத்துக்கும்
எனது மனநிறைவோடு இரு கரம் கூப்பிய நன்றிகள் 

(என் நூல் வெளியீட்டின் போது நான் உரைத்த ஏற்புரை
உள்ளத்தில் இருந்து வந்தவை) )

No comments:

Post a Comment