Tuesday 15 September 2020

தோழியோடு சில நிமிடம்

#ஓவியக்கவிதை
*******************

நெடு நாள் தோழியே 
நெருங்கிய தோழியே
சற்று இடைவேளையின் பின்னே
உன் முகம் கண்டேனடி தோழியே.

கலகலப்பைக் காணோமடி 
கிளுகிளுப்பு இல்லாமல் இருக்காயேடி 
என்னாச்சு ஏதாச்சு என் நெஞ்சம்  பதறுதடி  சொல்லிக்கக் கூடாதா எங்கிட்ட 
எனதருமைத் தோழியே.

சொல்லி அழ அன்று நீ இல்லையடி
சொல்லிக் கொள்ள இன்று #நா எழவில்லையடி.
புளுவாய்த் துடித்தேன் 
அனலாய் எரிந்தேன் 
கானல்நீர் வடித்தேன்.
நினைவு வாழ்க்கைகக்குள் 
இறுதியில் வீழ்ந்தேனடி 
இன்னும் என்ன சொல்ல வேணுமடி
என் அன்புத்  தோழியே.

கவிதை ஒன்று கிறுக்குகின்றேன்
கலங்காமல் படித்திடு  
கன்னி என் கடந்த காலக்  கதை 
அதற்குள்ளே உண்டம்மா தோழியே. 

(#கவிதை)

செவ்இளநீர்  #நீர் எடுத்து.
செங்கரும்பின் சார் எடுத்து.
செவ்வாழைக் கனி உரித்தெடுத்து.
செய்து வைத்தேன் பாணமொன்று.
சேர்த்தணைத்திட வந்திடும் மாமானுக்காக.

கருவாப்பட்டை பொடி போட்டு.
கருப்பட்டி இடித்துப் போட்டு.
கரகப்பான சோள மாவைப் போட்டு.
கரந்த பாலை சூடோடு போட்டு.
கரம் கொண்டு பிடித்தேன். 
இனிப்பான பண்டமொன்று.
கட்டியணைக்கும் மாமனுக்காக.

மனதை மயக்கிட  மணம் வீசிடவே.
மல்லிகைப் பூ நறுமணம் பூசி.
மந்தாரப்பூ சேலை உடுத்தி.
மகிழம்பூக் கொண்டை போட்டு.
மஞ்சள் வெயில் வேளையிலே.
மாமன் நெஞ்சோடு சாய்ஞ்சிக்கக் காத்திருந்தேன்.

எதிர் பார்ப்பு முற் புதராச்சு.
அத்தனையும் வீணாச்சு.
செய்த பண்டம் நாசமாச்சு.
சேர்ந்த ஆசை செத்துடிச்சு.
அதை என்னவென்று நான் சொல்ல.

கண்ணீரே சேதாரமாச்சு.
உள்ளக் குமுறலே மிச்சமாச்சு.
ஆத்திலே வெள்ளப் பெருக்காச்சு 
அதனோடு என் மாமன் மூச்சும் போச்சு.
ஆத்தாவுக்கும்  பித்துப் பிடிச்சாச்சு.
எல்லாமே என் வாழ்வில் முடிஞ்சு போச்சு.
புதுமையாய் நான் என்ன சொல்ல.

(கவிதையைப்  படித்து முடித்த உயிர்த் 
தோழி ஓவெனக் கதறி அழுதாள்)

(ஓவியருக்கு வாழ்த்துகள்)


No comments:

Post a Comment